திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.86 திருநாரையூர் பண் - பியந்தைக்காந்தாரம் |
உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்ம
செயல்தீங்கு குற்ற முலகில்
வரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம்
மிகவேத்தி நித்தம் நினைமின்
வரைசிலை யாகவன்று மதில்மூன் றெரித்து
வளர்கங்குல் நங்கை வெருவத்
திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.
|
1 |
ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற
பிணிநோ யொருங்கும் உயரும்
வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி
விதியான வேத விகிர்தன்
கானிடை யாடிபூதப் படையா னியங்கு
விடையான் இலங்கு முடிமேல்
தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு
திருநாரை யூர்கை தொழவே.
|
2 |
ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன்
துயருற்ற தீங்கு விரவிப்
பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை
ஒழிவுற்ற வண்ண மகலும்
போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று
புகழ்வானு ளோர்கள் புணருந்
தேரிடை நின்றஎந்தை பெருமா னிருந்த
திருநாரை யூர்கை தொழவே.
|
3 |
தீயுற வாயஆக்கை அதுபற்றி வாழும்
வினைசெற்ற வுற்ற உலகின்
தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம்
நிலையாக நின்று மருவும்
பேயுற வாயகானில் நடமாடி கோல
விடமுண்ட கண்டன் முடிமேல்
தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.
|
4 |
வசையப ராதமாய வுவரோத நீங்குந்
தவமாய தன்மை வரும்வான்
மிசையவ ராதியாய திருமார் பிலங்கு
விரிநூலர் விண்ணும் நிலனும்
இசையவ ராசிசொல்ல இமையோர்க ளேத்தி
யமையாத காத லொடுசேர்
திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.
|
5 |
உறைவள ரூன்நிலாய வுயிர்நிற்கும் வண்ணம்
உணர்வாக்கும் உண்மை உலகில்
குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில்
நிறைவாற்று நேசம் வளரும்
மறைவளர் நாவன்மாவின் உரிபோர்த்த மெய்யன்
அரவார்த்த அண்ணல் கழலே
திறைவளர் தேவர்தொண்டின் அருள்பேண நின்ற
திருநாரை யூர்கை தொழவே.
|
6 |
தனம்வரும் நன்மையாகுந் தகுதிக் குழந்து
வருதிக் குழன்ற உடலின்
இனம்வள ரைவர்செய்யும் வினையங்கள் செற்று
நினைவொன்று சிந்தை பெருகும்
முனமொரு காலம்மூன்று புரம்வெந்து மங்கச்
சரமுன் றெரித்த அவுணர்
சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.
|
7 |
உருவரை கின்றநாளில் உயிர்கொள்ளுங் கூற்றம்
நனியஞ்சு மாத லுறநீர்
மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின்
அழிபா டிலாத கடலின்
அருவரை சூழிலங்கை அரையன்றன் வீரம்
அழியத் தடக்கை முடிகள்
திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.
|
8 |
வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்கம் மிக்க
பகைதீர்க்கு மேய வுடலில்
தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற
கரவைக் கரந்து திகழுஞ்
சேறுயர் பூவின்மேய பெருமானு மற்றைத்
திருமாலும் நேட எரியாய்ச்
சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.
|
9 |
மிடைபடு துன்பமின்பம் உளதாக்கு முள்ளம்
வெளியாக்கு முன்னி யுணரும்
படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம்
ஒலிபாடி யாடி பெருமை
உடையினை விட்டுளோரும் உடல்போர்த் துளோரும்
உரைமாயும் வண்ணம் அழியச்
செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழவே.
|
10 |
எரியொரு வண்ணமாய உருவானை யெந்தை
பெருமானை உள்கி நினையார்
திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத்
திருநாரை யூர்கை தொழுவான்
பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன்
உரைமாலை பத்தும் மொழிவார்
திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க
துளதென்பர் செம்மை யினரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |
திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.87 திருநாரையூர் பண் - பியந்தைக்காந்தாரம் |
நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி
யரியான்மு னாய வொளியான்
நீரியல் காலுமாகி நிறைவானு மாகி
யுறுதீயு மாய நிமலன்
ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த
நலகண்டு பண்டு சுடலை
நாரியோர் பாகமாக நடமாட வல்ல
நறையூரின் நம்ப னவனே.
|
1 |
இடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை
யெதிர்நாணி பூண வரையிற்
கடும்அயி லம்புகோத்து எயில்செற் றுகந்து
அமரர்க் களித்த தலைவன்
மடமயில் ஊர்திதாதை எனநின்று தொண்டர்
மனம்நின்ற மைந்தன் மருவும்
றடமயி லாலநீடு குயில்கூவு சோலை
நறையூரின் நம்ப னவனே.
|
2 |
சூடக முன்கைமங்கை யொருபாக மாக
அருள்கார ணங்கள் வருவான்
ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு
படுபிச்ச னென்று பரவத்
தோடக மாயொர்காதும் ஒருகா திலங்கு
குழைதாழ வேழ வுரியன்
நாடக மாகவாடி மடவார்கள் பாடும்
நறையூரின் நம்ப னவனே.
|
3 |
சாயல்நன் மாதோர்பாகன் விதியாய சோதி
கதியாக நின்ற கடவுள்
ஆயக மென்னுள்வந்த அருளாய செல்வன்
இருளாய கண்டன் அவனித்
தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு
மலையின்கண் வந்து தொழுவார்
நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும்
நறையூரின் நம்ப னவனே.
|
4 |
நெதிபடு மெய்யெம்ஐயன் நிறைசோலை சுற்றி
நிகழம் பலத்தின் நடுவே
அதிர்பட ஆடவல்ல அமரர்க் கொருத்தன்
எமர்சுற்ற மாய இறைவன்
மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து
விடையேறி இல்பலி கொள்வான்
நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும்
நறையூரின் நம்ப னவனே.
|
5 |
கணிகையோர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை
மலர்துன்று செஞ்சடை யினான்
பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு
பலவாகி நின்ற பரமன்
அணுகிய வேதவோசை யகலங்க மாறின்
பொருளான ஆதி யருளான்
நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து
நறையூரின் நம்ப னவனே.
|
6 |
ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க
மவையார ஆட லரவம்
மிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும்
விகிர்தன் விடங்கொள் மிடறன்
துளிதரு சோலையாலை தொழில்மேவ வேதம்
எழிலார வென்றி யருளும்
நளிர்மதி சேருமாடம் மடவார்க ளாரும்
நறையூரின் நம்ப னவனே.
|
7 |
அடலெரு தேறுகந்த அதிருங் கழற்கள்
எதிருஞ் சிலம்பொ டிசையக்
கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன்
முனிவுற் றிலங்கை யரையன்
உடலொடு தோளனைத்து முடிபத் திறுத்தும்
இசைகேட் டிரங்கி யொருவாள்
நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல
நறையூரின் நம்ப னவனே.
|
8 |
குலமலர் மேவினானும் மிகுமாய னாலும்
எதிர்கூடி நேடி நினைவுற்
றிலபல எய்தொணாமை எரியா யுயர்ந்த
பெரியா னிலங்கு சடையன்
சிலபல தொண்டர்நின்று பெருமைக்கள் பேச
வருமைத் திகழ்ந்த பொழிலின்
நலமலர் சிந்தவாச மணநாறு வீதி
நறையூரின் நம்ப னவனே.
|
9 |
துவருறு கின்றவாடை யுடல்போர்த் துழன்ற
வவர்தாமு மல்ல சமணுங்
கவருறு சிந்தையாளர் உரைநீத் துகந்த
பெருமான் பிறங்கு சடையன்
தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண
முறைமாதர் பாடி மருவும்
நவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட
நறையூரின் நம்ப னவனே.
|
10 |
கானலு லாவியோதம் எதிர்மல்கு காழி
மிகுபந்தன் முந்தி யுணர
ஞானமு லாவுசிந்தை யடிவைத் துகந்த
நறையூரின் நம்ப னவனை
ஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த
தமிழ்மாலை பத்தும் நினைவார்
வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று
வழிபாடு செய்யும் மிகவே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |